search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எவ வேலு"

    • திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.
    • ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது.

    தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு தி.மு.க.வுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. திருமகன் ஒன்றை ஆண்டு காலத்தில் இறந்து விட்டார். பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.

    எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா. எனவே திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.

    ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பாக செங்கோட்டையன் எம் எல் ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மாநகராட்சி வளரும் என்று.

    நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறுதினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.

    அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் ஏற்றுமதியை பொறுத்துவரை அந்நிய செலாவணியை ஈட்டுவதில் ஆம்பூர் முதலிடத்தில் உள்ளது.
    • காலகாலமாக நாங்கள் அண்ணன்-தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிலதிபர்கள், தென்னிந்திய காலணி உற்பத்தி யாளர்கள் சங்கம், ஆம்பூர் தோல் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    இதில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    "இந்தியாவில் ஏற்றுமதியை பொறுத்துவரை அந்நிய செலாவணியை ஈட்டுவதில் ஆம்பூர் முதலிடத்தில் உள்ளது.

    இங்கிருந்து ஏறத்தாழ ரூ.2,500 கோடிக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகிறது. இந்தியா, தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு ஆம்பூர் உந்துசக்தியாக இருக்கிறது.

    திராவிடத்தையும் இஸ்லாத்தையும் பிரித்து பார்க்க முடியாது

    திராவிடத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு நாணயத்தின் ஒரு பகுதி திராவிடம் மற்றொரு பக்கம் இஸ்லாமாக இருக்கும். அதை பிரிக்க முடியாது. காலகாலமாக நாங்கள் அண்ணன்-தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஆம்பூர் இடைத்தேர்தல் வந்தபோது ரெட்டித்தோப்பு பாலம் குறித்து கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் தேர்தல் கால அறிக்கையில் கூறியபடி நிறைவேற்றுவோம்.

    அதேபோல், ஆம்பூர் வளர்ச்சிக்காக தேவைப்படும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அவற்றை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு உதயநிதி ஸ்டாலின் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
    • பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பது குறித்து கேட்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

    அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை.

    பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும்.

    தமிழ்நாடு முழுவதும், 69 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த மே மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டிடங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    இத்திட்டப்பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம், கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்.

    கடந்த முறை மழை பெய்த போதும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்ட அவர் இன்று சென்னையில் மழைநீர் தேங்கிய 17 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் மற்றும் சுற்றியுள்ள சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்ட அமைச்சர் எ.வ.வேலு பின்னர் அண்ணாசாலை பகுதியில் ஆய்வு செய்தார்.

    அங்குள்ள தாராபூர் டவர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எ.வ.வேலு, எழும்பூர், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா பகுதியிலும் சென்னையில் மேலும் பல இடங்களிலும் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

    இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வசந்தம் நகர், பருத்திப்பட்டு ஜே.பி. எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தேங்கிய தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

    • திருமங்கலம்-ராஜாபாளையம் புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மேம்பாலப் பணிகளை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் 1,281 தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார், குத்துக்கல்வலசை ஐ.டி.ஐ. சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து கூறியதாவது:-

    திருமங்கலம்-ராஜாபாளையம் புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். மேம்பாலப் பணிகளை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் 1,281 தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. அனைத்து தரைப்பாலங்களும் விரைவில் மேம்பாலங்களாக மாற்றப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்த நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு உறுதி செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்க சட்டசபையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

    இதற்காக 2 முறை இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை அரசு ஒரு போதும் எடுக்காது. இந்த இடத்தை சீர் செய்து விரைவில் பணியை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் இதற்கான நில அளவை பணி தொடங்கப்படுகிறது.

    66 ஏக்கரில் மலையில் இருந்து தண்ணீர் வரும் ஒரு குளமும் உள்ளது. அந்த குளத்தையும் பராமரித்து ஜல்லிக்கட்டு அரங்கில் கலந்து கொள்ள வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    மலையில் இருந்து வரும் தண்ணீரை எந்த வகையிலும் தடுக்க மாட்டோம். அந்த குளத்தின் பாசன பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இந்த பணிக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.

    3 பேர் நிச்சயம் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த டெண்டர் ரத்தாகிவிடும். ஒப்பந்ததாரர்கள் விரைவில் இந்த பணியை முடித்து தரும் வகையில் வர வேண்டும். அரசு பணிகளை பொறுத்தவரை 18 மாதங்கள், 24 மாதங்கள் என்று டெண்டர் கொடுக்கப்படுகிறது.

    சில ஒப்பந்ததாரர்கள் 12 மாதங்களிலேயே பணிகளை முடித்து விடுகிறார்கள். சிலர் நியமிக்கப்பட்ட காலத்தையும் கடந்து பணியை முடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டீசு கொடுப்பதும், அபராதம் விதிக்கவும் தான் முடிகிறது.

    இந்த பணியை பொறுத்தவரை விரைந்து முடிக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வருகிற 2024-க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம்.
    • பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை அருகே பரந்தூரில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்துக்கான நில எடுப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த திட்டத்துக்கு அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு பணியில் அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே நானும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அங்குள்ள 13 கிராமங்களின் விவசாயிகள், குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசினோம்.

    அவர்களில் பெரும்பான்மையானவர்கள், எடுக்கப்படும் நிலத்துக்கு அரசின் வழிகாட்டி மதிப்பைவிட அதிகமான தொகை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றனர். ஏகநாதபுரம், பரந்தூரில் வசிப்பவர்கள், விமான ஓடுபாதையை மாற்றி அமைத்தால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதை தவிர்க்கலாம் என்றனர். எனவே அதுபற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவர்களிடம் தெரிவித்து, அது முறையாக இருக்கும் என்றால் அதன்படி மாற்றலாம் என்று கூறினோம்.

    மேலும் பெரும்பான்மை மக்கள், நிலத்தின் விலையை அதிகமாக தரவேண்டும், மாற்று வீடுகள் தரவேண்டும் என்றனர். அரசுத் திட்டங்களை கொண்டுவரும்போது எந்த இடமானாலும் விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

    தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற 2029-ம் ஆண்டுடன் அதன் முழு கட்டுப்பாடும் முடிந்து விடுகிறது. சரக்கு கையாளுதல், தற்போதுள்ள ஓடுதளத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாது. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தின் வளர்ச்சி, மும்பையில் 2 விமான நிலையங்கள் உருவாக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவைப்படுகிறது.

    அதற்காக முதலில் 11 இடங்களை ஆய்வு செய்தோம். அதில் படாளம், திருப்போரூர், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்தோம். திருப்போரூர், படாளம் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காது. பரந்தூரைவிட பன்னூரில் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பதால் இறுதியில் பரந்தூர் முடிவு செய்யப்பட்டது.

    அங்கு நிலத்துக்கு அதிக தொகை தரவேண்டும் என்று கேட்டுள்ளதால், தற்போதுள்ள நில மதிப்பீட்டில் மூன்றரை மடங்கு அதிக தொகை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. விமான நிலையம் அமையும் பகுதியின் சுற்றுவட்டாரத்திலேயே அரசு அடையாளம் கண்டுள்ள இடங்களில் அவர்களுக்கு நிலமும், அதில் வீடு கட்ட பணமும் தரப்போகிறோம். அதாவது, எடுக்கும் நிலத்துக்கான தொகை, புதிய இடத்தில் நிலம் மற்றும் அங்கு வீடுகட்ட பணம் ஆகியவை தரப்படவுள்ளன. குறிப்பாக, மாடப்புறம் பகுதி மக்கள் அனைவருக்கும் ஒரே பகுதியில் இடம் தரப்போகிறோம்.

    புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம். வாகனங்கள் அதிகளவில் வந்து செல்ல முடியும். சென்னைக்குள் வரும் நெரிசலைக் குறைக்க முடியும். இதன் மூலம் அன்னியச் செலாவணி, பொருளாதார உயர்வு போன்றவை தமிழகத்துக்கு வரும்.

    கடந்த ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கையகப்படுத்த அரசு தீவிரம் காட்டுவது ஏன் என்று கேட்டால், அது தவறு. சாலை போடுவதை தி.மு.க. எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள். இல்லையேல் மாற்றுவழியைக் காணுங்கள் என்றுதான் தி.மு.க. சார்பில் சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

    பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம். வீடு கட்டவும் பணம் முழுமையாக கொடுக்கிறோம். இடத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். 13 கிராமத்தில் தகுதி அடிப்படையில் வீட்டில் படித்தவர்களுக்கு அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்கப்படும். நில எடுப்புக்காக மொத்தம் 13 கிராமங்களில் 1,005 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு நில எடுப்பு சட்டப்படி நிலங்களை எடுக்கிறோம்.

    இழப்பீட்டை கணக்கிடுவதில் 2 வகைகள் உள்ளன. அரசின் வழிகாட்டி மதிப்பீட்டை (வேறுபடக்கூடியது) வைத்து செட்டில் செய்வது ஒரு வகை. சந்தை மதிப்பை வைத்து செட்டில் செய்வது மற்றொரு வகை. நேரடியாக பேசும்போது அதை முடிவு செய்வோம்.

    வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் அரசு பணம் கொடுத்துவிடும் என்று சிலர் பயந்தனர். ஆனால், நிலத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டு பணம் தருவோம் என்று கூறியிருக்கிறோம். நீர்நிலைகள் அதிகமாக இருப்பதால் அதுபற்றி சென்னை ஐ.ஐ.டி.யுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இந்த திட்டத்தால் காவேரிப்பாக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் வரை வரும் ஓடைக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விமான நிலையத்துக்கான பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 8 ஆண்டுகளாகும். பரந்தூர் விவகாரத்தில் மற்ற கட்சியி னரால் மக்கள் தூண்டப்படுவதாக அரசு நினைக்கவில்லை.

    இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    • நேரு உள்விளையாட்டு அரங்கம் 6ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம் ஆகும்.
    • 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் எ.வ.வேலு, நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நேரு உள்விளையாட்டு அரங்கை இன்று பார்வையிட்டோம்.

    28-ந்தேதி இங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்வில் பிரதமர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள்.

    தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும்.

    தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    நேரு உள்விளையாட்டு அரங்கம் 6ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம் ஆகும். 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம்.

    நேரு அரங்கில் 24-ந்தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.

    தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். தமிழர்கள் உபசரிப்பில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வீரர்களுக்கு உணவு வழங்கப்படும். முதலமைச்சர் அன்றாடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் விசாரித்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சியில் நடந்தது விரும்பத்தகாத சம்பவம், அரசு நடு நிலையாக செயல்பட்டு தவறிழைத்தோருக்கு தண்டனை பெற்றுத் தரும். இறுதி சடங்கில் மாவட்ட அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையானது.
    • இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது, கைது நடவடிக்கை தொடரும்.

    சின்னச்சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    அந்த பள்ளியில் இன்று தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தீக்கிறையான பள்ளி அறைகள் மற்றும் அலுவல அறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:

    மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர்.

    தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

    சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது.

    வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது. கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • கல்வித்துறையின் கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டிடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றால், உரிய கருத்துரு அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    கோயமுத்தூர் மண்டலத்தில் பொதுப்பணித்துறையால், மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    மதிப்பீடு தயார் செய்யும்போது, அனைத்துத் தேவைகளையும் உள்ளடக்கி மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். திருந்திய நிர்வாக அனுமதி 10 சதவீதம் வரை சில தவிர்க்க முடியாத இனங்களில் மட்டுமே ஏற்கப்படும். நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    கல்வித்துறையின் கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டிடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றால், உரிய கருத்துரு அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    இனிமேல், புதிய கட்டிங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் எழில்மிக்கதாக இருக்க வேண்டும் என்றும், அதற்காகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள். இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும்.

    புதிய கட்டிடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைப்படம், 2 லட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்றுதான், கட்டடங்கள் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பொதுப்பணித் துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத்துறை பணிகள் தொடர்பாக தனியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டிங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விரைவாக செய்ய வேண்டும். பொது மக்களின் பயன்பாட்டினை கருதி இத்தகைய பணிகள் காலதாமதம் இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

    ×